Jan 22, 2014

பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் காலமானார்

பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் ஐதராபாத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 91.
தெலுங்கு திரைப்பட உலகில் முன்னோடியாக இருந்தவர் நாகேஸ்வர ராவ். தற்போது முன்னணி நாயகனாக வலம் வரும் நாகார்ஜுனின் தந்தையாவார்.
நாகேஸ்வர ராவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டிபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உற்சாகமாகக் கலந்து கொண்டார்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது;
1941ம் ஆண்டு ’தர்மபத்தினி’ என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நாகேஸ்வர ராவ். அதனைத் தொடர்ந்து தேவதாஸு, லைலா மஜ்னு, அனார்கலி என பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றவர். "தெலுங்கு திரையுலகின் எம்.ஜி.ஆர், என்.டி.ராமராவ் என்றால் சிவாஜி நாகேஸ்வரராவ்" என்று கூறுவார்கள். அந்தளவிற்கு மிகவும் புகழ்பெற்றவர்.
பத்ம பூஷன், தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வென்றுள்ளார். இவரது மறைவு தெலுங்கு திரையுலகினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடைசியாக 'மனம்' என்ற படத்தில் தனது மகன் நாகார்ஜுன், பேரன் நாக சைந்தன்யா ஆகியோருடன் நாகேஸ்வர ராவ் நடித்துள்ளார். அப்படத்தில் இவரது காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டுவிட்டன.

No comments: