இந்தியாவில் முதல் முறையாக வனப் பாதுகாப்புக்காகவும் வனக் குற்றங்களை தடுக்கவும் மத்தியப் பிரதேசத்தின் பன்னா புலிகள் சரணாலயத்தில் இரண்டு ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டுள்ளன. இந்திய வனத்துறையில் இது ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா, போர்நியோ காடுகளிலும் நேபாள், சீனா, ஸ்காட்லாந்து, நமீபியா மற்றும் சில மேற்கத்திய நாடுகளிலும் வனங்கள் பாது காப்பு, கண்காணிப்புக்காக ஆளில்லா விமானங்களை பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தின் பன்னா புலிகள் சரணாலயத்தில் ஆளில்லா விமானங் களை ஏவ திட்டமிட்டது.
கடந்த 8-ம் தேதி மத்திய ராணுவ அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் பன்னா வனப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. தொடர்ந்து கடந்த ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிக ளில் இரண்டு ஆளில்லா விமானங்கள் பன்னா வனத்தில் வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டன.
இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானி ரமேஷ் இதுகுறித்து ‘தி இந்து’விடம் கூறுகையில், “ஏற்கெனவே ‘மாசா’ வகை விமானத்தைதான் ஏவ திட்ட மிட்டிருந்தோம். ஆனால், தற்போது அதைவிட மேம் படுத்தப்பட்ட திறன் கொண்ட வேன்குவார்டு (Vanguard) விமானம் ஒன்றும், கைப்பி (Caipy) விமானம் ஒன்றும் என இரு விமானங்கள் ஏவப்பட்டன. இவை அமெரிக்காவின் ‘கன்சர்வேஷன் டிரோன்ஸ்’ நிறுவனம் மற்றும் ஸ்விட்சர்லாந்தின் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது.
ஒரு மீட்டர் நீளம் கொண்ட இந்த விமானங்களில் வேன்குவார்டு 40 கி.மீட்டரும், கைப்பி 20 கி.மீட்டரும் தொடர்ந்து வானில் பறக்கக்கூடியவை. இவை ஒவ்வொன்றும் ரூ. ஐந்து லட்சம் மதிப்பு கொண்டவை.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கூடுதல் டி.ஐ.ஜி-யான எஸ்.பி.யாதவ், மத்திய பிரதேச வனம் மற்றும் சுற்றுலாத் துறை முதன்மை செயலாளர் பி.பி.சிங், முதன்மை வனப்பாதுகாவலர் நரேந்திரகுமார், இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (Worldwide fund for nature) அமைப்பின் கிறிஸ்டி வில்லியம்ஸ், கன்சர்வேஷன் டிரோன்ஸ் அமைப்பின் லேயன் பின், பன்னா புலிகள் காப்பகத்தின் கள இயக்குநரான ஸ்ரீனிவாசமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் விமானங் கள் பறக்கவிடப்பட்டன.
மனிதர்கள் புக முடியாத காடு களை ஆய்வு செய்தல், சந்தனக் கட்டைகள், செம்மரக் கட்டை உள்ளிட்ட வனக் கொள்ளையைத் தடுத்தல், வேட்டைத் தடுப்பு, காட்டுத் தீ தடுப்பு, Radio frequency identification தொழில்நுட்பம் மூலம் வன விலங்குகளை கண்காணித்தல், நீர் நிலைகளை கண்காணித்தல், வனங்கள் குறித்த வரைபடங்களை தயாரித்தல், வனங்கள் விரிவாக்கம் மற்றும் அழிவுகளின்போது அவற்றை அளவிடுதல், அழியும் தருவாயில் உள்ள வன உயிரினங்கள் மற்றும் மரம், தாவரங்களை கண்டறிந்து பாதுகாத்தல், வன விலங்கு கணக்கெடுப்பு, அவற்றின் பழக்க வழக்கங்களை கண்காணித்தல் போன்ற பணிகள் இவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும்.
தற்போது பன்னா புலிகள் காப்பகத்தில் மட்டுமே விமானங்கள் பறக்க மத்திய ராணுவ அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
அடுத்த கட்டமாக, வட இந்தி யாவில் ஒரு பகுதியிலும், தென்னிந்தி யாவில் ஒரு பகுதியிலும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இதற் காக இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிறுவனம் சொந்த தொழில்நுட்பத்தில் ஆளில்லா விமானங்களை தயாரிப்ப தற்கான பணிகளை மேற்கொள்ளும்.
தமிழகத்தில் யானை வலசை பாதைகளை கண்டறிந்து முறைப் படுத்துதல், மலை உச்சிகளில் வாழும் வரையாடுகளை கணக்கெடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய தனி கவனம் செலுத்தி வருகிறேன்.
முதல் முறையாக ஆளில்லா விமானங்களை செலுத்தியிருப் பதின் மூலம் இந்திய வனத் துறையை தனது அடுத்தக் கட்டத்தை எட்டியிருக்கிறது” என்றார்.
No comments:
Post a Comment