Jan 26, 2014

நாட்டின் மிகப்பெரிய தேசிய கொடி

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நாட்டிலேயே மிகப் பெரிய தேசியக் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 207 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில் இன்று முதல் 24 மணி நேரமும் பறக்கும்.
பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே இருக்கும் தேசிய ராணுவ நினைவிடத்தில் 207 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பம் நிறுவப்பட்டுள்ளது. இதற்காக, 48 அடி அகலமும் 72 அடி நீளமும் 31 கிலோ எடையும் கொண்ட தேசியக் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினவிழாவை முன்னிட்டு, பிரம்மாண்டமான அந்த தேசியக் கொடியை கர்நாடக ஆளுநர் ஹெச்.ஆர். பரத்வாஜ் ஞாயிற்றுக்கிழமை ஏற்றி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்த பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். நாட்டின் மிக உயரமான இந்த தேசிய கொடி 24 மணி நேரமும் பட்டொளி வீசிப் பறக்கவிடப்படும்.
இந்தக் கொடியை நிறுவிய காங்கிரஸ் எம்.பி.யும் கொடி அறக்கட்டளையின் நிறுவனருமான நவீன் ஜிந்தால் சனிக்கிழமை பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
நமது நாட்டின் விடுதலைக்காக போராடி பல்வேறு தியாகங்களை செய்த தியாகிகளின் அர்ப்பணிப்பின் அடையாளமே நமது தேசியக் கொடி. இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொரு குடிமகனின் முகவரியும் தேசியக் கொடியில் பொதிந்திருக்கிறது. அதனை மதித்துப் போற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. எனவேதான் நான் பல்வேறு ஆண்டுகளாக போராடி நாட்டின் மிகப்பெரிய தேசிய கொடியை நிறுவியுள்ளேன்.
அமெரிக்காவில் ஆண்டு முழுவதும் இரவு பகலாக அந்த நாட்டின் தேசியக் கொடியை பறக்கவிடுவது வழக்கம். ஆனால் நம் நாட்டில் அதுபோன்ற நடைமுறை வழக்கத்தில் இல்லை.
இந்நிலையில், 24 மணி நேரமும் தேசியக் கொடியை பறக்கவிடுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என 2004 ஜனவரி 23-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைக் கொண்டாடும் வகையில், தீர்ப்பு வெளியாகி 10-ஆண்டுகள் கழித்து நாட்டின் மிகவும் உயரமான கொடிக் கம்பமும் தேசியக் கொடியையும் பெங்களூரில் அமைத்திருக்கிறோம் என்றார்.
எங்கிருந்தும் பார்க்கலாம்
பெங்களூரின் 50 கி.மீட்டர் சுற்றளவில் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்தக் கொடியைப் பார்க்க முடியும். 100 அடிக்கும் குறைவான உயரத்தில் அமைந்துள்ள கொடிக் கம்பத்தில் பறக்கவிடப்படும் தேசியக் கொடியை மாலையில் இறக்கிவிட வேண்டும் என்பது மரபு. ஆனால், 100 அடி உயரத்துக்கும் அதிகமாக இந்தக் கொடி மரம் அமைக்கப்பட்டுள்ளதால், மாலையில் கொடியை இறக்க வேண்டியதில்லை.
இரவிலும் பட்டொளி வீசிப் பறக்க உள்ள இக்கொடியைக் காணும் வகையில் கொடிக் கம்பத்தைச் சுற்றி அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் மாறிவரும் தட்பவெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் வகையில் இக்கொடி 'டேனியர் பாலியஸ்டர்' துணியால் தயாரிக்கப்பட்டுள்ளது.

No comments: